சிவசேனா அதிகாரத்திற்காக பிறக்கவில்லை; அதிகாரம் தான் சிவசேனாவிற்காக பிறந்துள்ளது - சஞ்சய் ராவத்

சிவசேனா அதிகாரத்திற்காக பிறக்கவில்லை; அதிகாரம் தான் சிவசேனாவிற்காக பிறந்துள்ளது என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-30 05:53 GMT

மும்பை,

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக திரண்டனர். சட்டப்பேரவையை இன்று கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மராட்டிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மாநில கவர்னர் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டது.

பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்ட நிலையில் முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே நேற்று இரவு ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து சிவசேனா செய்தித்தொடர்பாளரும் உத்தவ் ஆதரவாளருமான சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தபோது அனைவரும் உணர்ச்சிவசப்பட்டோம். உத்தவ் தாக்கரே மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளோம். அனைத்து மதம், ஜாதி மக்கள் உத்தவ் தாக்கரேவை ஆதரிக்கின்றனர். சோனியா காந்தியும், சரத் பவாரும் உத்தவ் தாக்கரே மீது நம்பிக்கை வைத்தனர்.

சிவசேனா அதிகாரத்திற்காக பிறக்கவில்லை, அதிகாரம் தான் சிவசேனாவிற்காக பிறந்துள்ளது. இது தான் பால சாஹேப் தாக்கரேவின் மந்திரிச்சொல். சொந்தமாக உழைத்து நாங்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவோம்' என்றார்.  

மேலும் படிக்க... மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

Tags:    

மேலும் செய்திகள்