சிக்கமகளூருவில் அரசு கல்லூரிக்கு 'ஹிஜாப்' அணிந்து வந்த மாணவிகளால் பரபரப்பு

சிக்கமகளூருவில் அரசு கல்லூரிக்கு ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து கல்லூரி நிர்வாகம் எச்சரித்ததால் உடனே அவர்கள் ‘ஹிஜாப்பை’ கழற்றினர்.

Update: 2023-08-11 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் அரசு கல்லூரிக்கு 'ஹிஜாப்' அணிந்து வந்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து கல்லூரி நிர்வாகம் எச்சரித்ததால் உடனே அவர்கள் 'ஹிஜாப்பை' கழற்றினர்.

அரசு கல்லூரி

சிக்கமகளூரு(மாவட்டம்) டவுன் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் அரசு பட்டதாரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு உடுப்பி மாவட்டத்தில் 'ஹிஜாப்' அணிந்து முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு வந்ததால் பிரச்சினை எழுந்தது. அந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. அதையடுத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மத அடையாள ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதனால் மாநிலத்தில் ஏராளமான கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சீருடைகளில் தான் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கட்டாயம் பின்பற்ற உத்தரவு

இந்த நிலையில் சிக்கமகளூருவில் உள்ள அரசு பட்டதாரி கல்லூரியில் படித்து வரும் சில முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு 'ஹிஜாப்' அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே மத அடையாள ஆடைகளை பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்களில் அணிந்து வர தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி அந்த மாணவிகள் 'ஹிஜாப்' அணிந்து கல்லூரிக்கு வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கல்லூரிக்குள் மாணவ-மாணவிகள் சீருடையில் தான் வரவேண்டும், மத அடையாள ஆடைகள் எதுவும் அணியக்கூடாது. இதை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

'ஹிஜாப்பை' கழற்றிவிட்டு...

மேலும் இந்த உத்தரவை கல்லூரியின் அறிவிப்பு பலகையிலும் கல்லூரி நிர்வாகத்தினர் எழுதி உள்ளனர். இதுமட்டுமின்றி ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடனடியாக அழைத்து எச்சரித்ததாகவும், அதன்பேரில் அவர்கள் உடனே ஹிஜாப்பை கழற்றி விட்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்