சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரம் சொத்துகள் முடக்கம்..!!
சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா மாநிலங்களில் அரங்கேறிய சாரதா சீட்டு நிறுவன மோசடி, அங்கெல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சீட்டு நிறுவனம் ரூ.2,459 கோடியை பொதுமக்களிடம் வசூலித்துவிட்டு, அதில் ரூ.1,983 கோடி அளவுக்கு திரும்பத்தரவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. இதில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சாரதா சீட்டு நிறுவன மோசடியில் பலன் அடைந்தவர்கள் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வருகிறது.
அந்த வகையில், நளினி சிதம்பரம், தேவபிரதா சர்க்கார், தேவேந்திரநாத் பிஸ்வாஸ், அசாம் முன்னாள் மந்திரி அஞ்சன் தத்தாவின் அனுபூதி பிரிண்டர்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ் ஆகியோருக்கு சொந்தமான ரூ.3.30 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளையும், ரூ.3 கோடி அளவிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத்துறை இயக்குனரகம் முடக்கி உள்ளது. இதை ஒரு அறிக்கையில், அமலாக்கத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.