மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் சரத்பவார் இன்று ஆலோசனை

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சரத்பவார் இன்று ஏற்பாடு செய்துள்ளார்.

Update: 2023-03-22 22:15 GMT

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது தடவையாக ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

அதே சமயத்தில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்க சில மாநில கட்சிகள் முயன்று வருகின்றன.

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி அணியை அமைக்க மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் இடம்பெறாத எதிர்க்கட்சி கூட்டணி வெற்றிபெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு இக்கூட்டம் நடக்கிறது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சரத்பவார் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடப்பதற்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும். ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அவற்றை தலைமை தேர்தல் கமிஷனர் தீர்த்து வைக்க வேண்டும்.

'சிப்' பொருத்தப்பட்ட எந்த எந்திரத்திலும் தில்லுமுல்லு செய்யலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, பேராசை கொண்ட சக்திகளால் ஜனநாயகம் களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது.

நேர்மையான தேர்தல் நடப்பதற்காக, நாம் அனைவரும் அமர்ந்து ஆலோசனை நடத்த வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சரத்பவாரின் அந்தஸ்தை கருதி, கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்