சரத்பவார் பேச்சு ஊடகங்களில் திரித்து கூறப்படுகிறது - சஞ்சய் ராவத்
மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பேச்சு திரித்து கூறப்படுவதாகவும் சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
கூட்டணியில் ஒற்றுமை
தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மகா விகாஸ் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். இவரின் பேச்சு கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்வியை எழுப்பியது.
இதற்கிடையே உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் இது குறித்து நேற்று கூறியதாவது:-
மும்பையில் பொதுகூட்டம்
மகா விகாஸ் அகாடி கூட்டணி வலிமையாக உள்ளது. நாங்கள் ஒன்றாக பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம், நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை தெரிவிக்கவே இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வருகிற மே 1-ந் தேதி அன்று மும்பையில் பெரிய பொதுக்கூட்டம் ஒன்று நடக்கும். மகா விகாஸ் அகாடி மூத்த தலைவர்கள் அனைவரும் அந்த மேடையில் ஒன்று கூடுவார்கள்.
மகா விகாஸ் கூட்டணியை உருவாக்குவதில் சரத்பவார் முக்கிய பங்கு வகித்துள்ளார். நாம் ஒன்றாக இருந்தால் 2024-ம் ஆண்டு பா.ஜனதாவை தோற்கடித்து அதிக எண்ணிக்கையில் மக்களவை தொகுதியில் வெற்றி பெற முடியும் என்று அவர் கருதுகிறார். அவரது பேச்சுகள் திரித்து கூறப்படுகிறது. மகா விகாஸ் அகாடி இணைந்து தேர்தலை சந்திக்கும்.
ஷிண்டேவை மாற்ற முயற்சி
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அல்லது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என யாராக இருந்தாலும், பா.ஜனதாவை வலுப்படுத்த இந்த கட்சிகளை உடைக்க முயற்சிக்கின்றன. அவர்களிடம் உண்மையானவர்கள்(ஒரிஜினல்) யாரும் இல்லை. எல்லாம் போலிகள் தான் உள்ளன. இது விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஊழல்வாதிகளை நேர்மையானவர்களாக மாற்றும் வாஷிங் மெஷின் தொழிலை பா.ஜனதா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பா.ஜனதா விரும்பியதை செய்ய தவறியதால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை மாற்றுவதற்கான முயற்சி திரைக்கு பின்னால் நடந்து வருகிறது.
எங்கள் அரசை கவிழ்க்க ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்தப்பட்டார். ஆனால் ஒரு முதல்-மந்திரியாக, அவர் மராட்டியத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த தவறிவிட்டார். இந்த அரசை அமைத்ததில் இருந்து பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
பாகிஸ்தான் பெயர்
முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, உண்மையான சிவசேனா யாருடையது என்று பாகிஸ்தானுக்கு கூட தெரியும் என்று கூறியதை வைத்து சர்ச்சை உருவாக்க முயற்சிப்பவர்கள் தேர்தல் வெற்றி பெற பாகிஸ்தானின் பெயரை பயன்படுத்த கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் பெயரை எடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏக்நாத் ஷிண்டே அரசு 20 நாட்களுக்குள் கவிழ்ந்து விடும் என்று நேற்று முன்தினம் சஞ்சய் ராவத் கூறியது குறிப்பிடத்தக்கது.