மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் கைது

ராய்ச்சூரில் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதுடன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குள் புகுந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-30 21:53 GMT

பெங்களூரு:-

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

ராய்ச்சூர் மாவட்டம் சக்திநகரில் ஒரு பள்ளி உள்ளது. அங்கு தலைமை ஆசிரியராக வி.கே.அங்கடி பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வி.கே.அங்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதாவது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வி.கே.அங்கடி வாங்கி வைத்திருந்தார். பின்னர் மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல்கள், ஆபாச படங்களை அனுப்பி வைத்ததுடன், அடிக்கடி செல்போனில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபோல், ஒரு மாணவி மட்டும் அல்லாமல் பல்வேறு மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வி.கே.அங்கடி பாலியல் தொல்லை கொடுத்திருந்தார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதாகவும், தன்னுடைய வீட்டுக்கு தனியாக வரும்படியும் ஏராளமான மாணவிகளிடம் கூறி வந்துள்ளார். இதுபற்றி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறினார். அந்த மாணவியை போன்று மற்ற மாணவிகளும் பெற்றோரிடம் தெரிவித்தார்கள்.

தலைமை ஆசிரியர் கைது

உடனே 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு சென்றனர். மேலும் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியரை பிடித்து தாக்க முயன்றனர். அதற்குள் போலீசார், பள்ளிக்கு வந்து வி.கே.அங்கடியை மீட்டார்கள். பின்னர் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், தங்களிடம் ஒப்படைக்கும் படி கூறியும் கிராம மக்கள் பள்ளிக்குள் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானமாக பேசினார்கள்.

இதுபற்றி ராய்ச்சூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வி.கே.அங்கடியை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்