நீட் பயிற்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; ஆசிரியரை நிர்வாணப்படுத்தி, தெருவில் ஊர்வலம்
மத்திய பிரதேசத்தில், நீட் பயிற்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியரை நிர்வாணப்படுத்தி, தெருவில் ஊர்வலம் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.;
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வந்த 17 வயது மாணவி ஒருவரை விவேக் என்ற ஆசிரியர், படிப்பில் உதவுகிறேன் என கூறி காபி சாப்பிட வரும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த மாணவி சென்றதும் அவரிடம், ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இதன்பின்னர், ஆசிரியருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரான சைலேந்திரா என்பவர் தொலைபேசி வழியே மாணவியை தொடர்பு கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி வெளியே கூற கூடாது என மாணவியை மிரட்டியுள்ளார். இந்நிலையில், சம்பவம் பற்றி அறிந்ததும் மாணவியின் உறவினர்கள் உள்பட சிலர் சேர்ந்து பயிற்சி மையத்திற்கு சென்று அந்த ஆசிரியரை அடித்து, ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி உள்ளனர்.
இதன்பின் அவரை தெருவில் ஊர்வலம் அழைத்து சென்றனர். பின்பு அவரை போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
2 ஆசிரியர்கள் மீது துகோகஞ்ச் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரை தாக்கிய கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.