கடனை வசூலிக்க சென்ற முகவர்கள் தகாத வார்த்தைகளை பேசியதால் மனவேதனையில் தற்கொலை செய்த மாணவி; 7 பேர் கைது!
இந்த சம்பவம் தொடர்பாக, வங்கி முகவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
அமராவதி,
கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆந்திராவின் நந்திகாமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனநல ஆலோசனையே தற்கொலை எண்ணத்தை அகற்றும் என மருத்துவர்கள் வழிகாட்டுகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திராவின் நந்திகாமா மாவட்டத்தில் கடன் வசூலிக்கும் முகவர்களின் துன்புறுத்தல் காரணமாக வர்ஷினி என்ற 18 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வர்ஷினி, அவரது தாயார் அருணா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அடங்கிய குடும்பம் நந்திகாமா மாவட்டத்தில் ரித்துப்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 27 அன்று, வர்ஷினி தனது வீட்டின் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் விட்டுச் சென்ற தற்கொலைக் குறிப்பில், தனது குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலை குறித்த கவலையில் தான் உள்ளதாகவும், தன் குடும்பத்திற்கு இனி நான் ஒரு சுமையாக இருக்க விரும்பவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வர்ஷினியின் தந்தை ஜாஸ்தி பிரபாகர் ராவ் டெல்லியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், வங்கியில் இருந்து ரூ.3.5 லட்சம் தொகையை கடன் வாங்கிய வர்ஷினியின் குடும்பத்தார் அதை திருப்பிச் செலுத்தவில்லை.
தற்கொலை சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிரெடிட் கார்டு கடன் வசூலிக்கும் முகவர்கள், வர்ஷினியின் வீட்டை அணுகி குடும்பத்தை தகாத வார்த்தைகளை பேசி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வர்ஷினியின் தாயார் அருணா கூறுகையில், கடன் பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வரும் முகவர்கள், எங்களை பலமுறை அநாகரிகமான அசிங்கமான வார்த்தைகளால் திட்டி பேசி சென்றனர். அவர்கள் சென்ற பிறகு எனது மகள் மிகவும் அமைதியாகிவிட்டாள். மனவேதனையில் உணவு உண்ணாமல் இருந்ததாக அவர் கூறினார்.
இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு வர்ஷினி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக, வங்கி முகவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்ய எண்ணம் கொண்டவர்கள், அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வரும் இலவச ஆலோசனையை 9152987821 என்ற எண்ணில் போனில் தொடர்புகொண்டு கேட்டுப்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வாகாது.
தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :
தற்கொலைத் தடுப்பு மையம் - 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.
பெண்களுக்கான தீர்வு மையம் - 1091