உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு; ஷிண்டே முகாமில் இணைந்த மற்றொரு சிவசேனா எம்.எல்.ஏ.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு மற்றொரு பின்னடைவாக, மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எதிர்தரப்பு முகாமில் மற்றொரு எம்.எல்.ஏ. இன்று இணைந்து உள்ளார்.;
கவுகாத்தி,
மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் அமர்த்தும் முடிவுக்கு துணை சபாநாயகர் ஒப்புதல் வழங்கி விட்டார். இந்த நிலையில், மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு மற்றொரு பின்னடைவாக, மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எதிர்தரப்பு சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய முகாமில் மற்றொரு சிவசேனா எம்.எல்.ஏ. இன்று இணைந்து உள்ளார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், எம்.எல்.ஏ. திலீப் லண்டே கவுகாத்தியில் உள்ள ஆடம்பர ஓட்டலுக்குள் நுழையும் வீடியோ ஒன்றும் வெளியானது. மும்பையில் உள்ள சந்திவலி சட்டசபை தொகுதி உறுப்பினரான லண்டே, அந்த அணியில் சேர்ந்து உள்ளது, உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், எதிர்தரப்பில் சேர்ந்துள்ள சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது. எனினும் ஷிண்டே கூறும்போது, மொத்தமுள்ள சிவசேனாவின் 55 எம்.எல்.ஏ.க்களில் 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 சுயேச்சைகளின் ஆதரவு தனக்கு உள்ளது என கூறியுள்ளார்.
தங்களது அணியே உண்மையான சிவசேனா என கூறியுள்ள ஷிண்டே, 37 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்திட்ட கடிதங்களையும், துணை சபாநாயகர் ஜிர்வால், கவர்னர் பகத்சிங் கோஷியாரி மற்றும் சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்து உள்ளார்.