செந்தில் பாலாஜி விவகாரம்: அமலாக்கத்துறை மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 24-ம் தேதி ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பண பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். கோர்ட்டு உத்தரவுபடி அவரது காவல் நீட்டிக்கப்பட்ட போதிலும் நெஞ்சு வலி இருப்பதாக அவர் கூறியதால் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
சென்னை ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதை அண்மையில் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு விசாரிப்பதாக கூறி ஜூலை 4-க்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "மேல்முறையீடு மனுக்கள் பலனற்றதாகிவிட்டன, புதிய மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்" என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:- செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது. அரசியலில் செல்வாக்கு மிக்க செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் முழுமையாக விசாரணை நடத்த இயலாது. விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் இந்த வழக்கு நீர்த்து போக வாய்ப்பு உள்ளது.
எனவே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை.
செந்தில் பாலாஜி ஆஸ்பத்திரியில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் எங்களால் உரிய கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி வழக்கீல் சுப்ரீம் கோர்ட்டே முடிவு எடுக்க வேண்டும் என்று வக்கீல் தெரிவித்தார். மேலும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு தொடர்பாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
3-வது நீதிபதியை சென்னை ஐகோர்ட்டு ஒரு வாரத்துக்குள் நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும். வழக்கை விரைவாக விசாரிக்க பட்டியலிட வேண்டும். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்யலாம். நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில்தான் இருப்பார் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.