பல்பொருள் அங்காடி உரிமையாளரை தாக்கியதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பல்பொருள் அங்காடி உரிமையாளரை தாக்கியதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

Update: 2022-12-01 18:45 GMT

பெங்களூரு:

பெண் ஊழியருடன் தகராறு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் ராஜேஸ்வரி கெய்க்வாட் (வயது 31). இவர் கர்நாடக மாநிலம் விஜயாப்புரா (மாவட்டம்) டவுனை சேர்ந்தவர். இந்த நிலையில் ராஜேஸ்வரி கெய்க்வாட் தனது தோழியான அஸ்வினி என்பவருடன் சோலாப்பூர் சாலையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்று உள்ளார். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த வாசனை திரவிய பாட்டில்களை ராஜேஸ்வரியும், அவரது தோழி அஸ்வினியும் திறந்து பார்த்ததாக தெரிகிறது.

அப்போது பல்பொருள் அங்காடியில் வேலை செய்யும் ஒரு பெண் ஊழியர், ராஜேஸ்வரி, அஸ்வினியிடம் 'தேவைப்பட்டால் மட்டும் வாசனை திரவிய பாட்டில்களை திறந்து பாருங்கள். இல்லாவிட்டால் திறக்க வேண்டாம். பாட்டில்களை திறந்து பார்த்தால் வாசனை போய் விடும்' என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த ராஜேஸ்வரி, அந்த பெண் ஊழியரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தாக்கியதாக குற்றச்சாட்டு

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் மல்லிகார்ஜூன், ராஜேஸ்வரியை சமாதானம் செய்ய முயன்று உள்ளார். அப்போது நான் யார் என்று தெரியுமா? என்று மல்லிகார்ஜூனிடம், ராஜேஸ்வரி மிரட்டும் தொனியில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிலருக்கு போன் செய்து பல்பொருள் அங்காடிக்கு ராஜேஸ்வரி வரவழைத்ததாகவும், பல்பொருள் அங்காடி உரிமையாளர் மல்லிகார்ஜூன், ஊழியர்களை ராஜேஸ்வரியும், அவர் அழைப்பின்பேரில் வந்த சிலரும் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மல்லிகார்ஜூனும், ராஜேஸ்வரியும், சிலரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். ஆனால் தாக்குதல் சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ராஜேஸ்வரி மறுத்து உள்ளார்.

புகார் அளிக்கவில்லை

இந்த சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜயாப்புரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த்குமார், பல்பொருள் அங்காடி உரிமையாளர் மல்லிகார்ஜூன் தன்னை ராஜேஸ்வரி தாக்கியதாக போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

அதுபோல மல்லிகார்ஜூன் மீது ராஜேஸ்வரியும் புகார் அளிக்கவில்லை. ஒருவேளை புகார் அளித்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். பல்பொருள் அங்காடி உரிமையாளரை தாக்கியதாக கிரிக்கெட் வீராங்கனை மீது குற்றச்சாட்டு எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்