பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரம்: உத்தரவை செயல்படுத்த ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.;
புதுடெல்லி,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனை) சட்டம் 2016-ல் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு இடஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும் என்ற சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரியும், போட்டித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி தயாரித்து பதவி உயர்வு வழங்க உத்தரவிடக்கோரியும், பொதுப்பணித்துறை பொறியாளரான ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த செந்தூர் உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கினால் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் அளவு அதிகரித்துவிடும் எனக் கூறி அந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்தது. மேலும், இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி கணக்கிட வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் சீனியாரிட்டி கணக்கிட்டு அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நேற்று மீண்டும் விசாரித்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் உத்தரவுகளை செயல்படுத்த கூடுதல் அவகாசம் தேவை என வாதிட்டார்.
அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் அளித்து விசாரணையை தள்ளிவைத்தது.