காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா திடீர் அறிவிப்பு

அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக தனது எக்ஸ் தளத்தில் மிலிந்த் தியோரா பதிவிட்டுள்ளார்.

Update: 2024-01-14 07:29 GMT

புதுடெல்லி,

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முரளி தியோரா. தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். மும்பை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர்.

இந்நிலையில், மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக மிலிந்த் தியோரா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளபதிவில் தெரிவித்திருப்பதாவது,

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். இதன்மூலம் காங்கிரசுடனான 55 ஆண்டுகால உறவு முடிவுக்கு வருகிறது.

பல ஆண்டுகளாக தங்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக அனைத்து தலைவர்களுக்கும், சக பணியாளர்களுக்கும் மற்றும் காரியகர்த்தாக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான செய்தி வெளியானது. இதில் தெற்கு மும்பை தொகுதியை சிவசேனாவிற்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதோடு தென்மும்பை தொகுதியில் சிவசேனா போட்டியிடும் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்தும் அறிவித்தார். அத்தொகுதியில் தற்போது எம்.பி.யாக இருக்கும் அரவிந்த் சாவந் அத்தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டு இருந்தார். இதற்கு மிலிந்த் தியோரா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

வழக்கமாக மிலிந்த் தியோரா தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிடுவதுதான் வழக்கம். ஆனால் அத்தொகுதி கிடைக்காது என்று கருதி திடீரென மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்டத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில், மிலிந்த் தியோரா விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்