தேசத்துரோக வழக்கு: விசாரணைக்கு சரியாக ஆஜராகாத நவநீத் ரானா, ரவிரானா மீது சாடிய மும்பை சிறப்பு கோர்ட்டு

நவநீத் ரானா, ரவிரானா ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி சிறப்பு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.;

Update: 2022-08-05 08:19 GMT

Image Courtesy:PTI 

மும்பை,

மும்பை பாந்திராவில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ரானா ஆகியோர் அறிவித்தனர். இதனால் மும்பையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 23-ந் தேதி இருவரும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக எந்த ஊடகங்களிலும் பேசக்கூடாது, இதே தவறை மீண்டும் செய்தால் ஜாமீன் பறிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் இவர்களுக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் நவநீத் ரானா, ரவிரானா ஆகியோர் நிபந்தனைகளை மீறியதாக கூறி அவர்களது ஜாமீனை ரத்து செய்ய கோரி போலீசார் சிறப்பு கோர்ட்டில் மே 9-ந் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் இந்த தம்பதியோ அல்லது அவர்களது வக்கீலோ கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனைதொடர்ந்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இன்றும் அந்த தம்பதியினர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு அமைந்ததில் இருந்து நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் கோர்ட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். கோர்ட்டு விசாரணையில் சரியாக ஆஜராகாத நவநீத் ரானா, ரவிரானா ஆகியோரை நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

இது குறித்து அரசின் சிறப்பு வக்கீல் பிரதீப் காரத் கூறுகையில், புதிய அரசு வந்ததில் இருந்து இந்த தம்பதிகளோ அல்லது அவர்களின் வக்கீல்களோ கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்கள் சட்ட நடைமுறைகளை எளிதாக எடுத்துக்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தம்பதிகள் சார்பில் ஆஜரான வக்கீல், விசாரணையில் ஆஜராவதற்கு கால அவகாசம் கோரினார். இதனையடுத்து இந்த வழக்கு ஆகஸ்ட் 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்