ஞானவாபி மசூதியில் கடவுள் சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளன: வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா
மசூதியில் உடைந்த இந்து சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 500-600 ஆண்டுகள் பழமையானதாகத் தெரிகிறது.
வாரணாசி,
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை அடுத்து ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனையும், மசூதி சுவர்களில் உள்ள கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத இதர இந்து தெய்வங்களையும் தினசரி வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றம் 5 பெண்கள் மனு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, மசூதியை ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.அதன்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் மே 14, 15, 16 தேதிகளில் நடத்தப்பட்ட வீடியோ சர்வே அறிக்கையை சிறப்பு வழக்குரைஞர் ஆணையர் விஷால் சிங் இன்று தாக்கல் செய்தார்.
அதேநேரத்தில், இந்து மனுதாரர் தொடர்பான வழக்கறிஞரும், கமிஷனில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவருமான அஜய் மிஸ்ராவும், சீல் வைக்கப்பட்ட கவர் மூலம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். முன்னதாக, மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை வெளியில் கசிய செய்ததாக கூறி இந்து மனுதாரரர் தரப்பிலான வழக்கறிஞர் அஜய் மிஸ்ராவை கமிஷனில் இருந்து வாரணாசி கோர்ட்டு நீக்கம் செய்தது.
இந்நிலையில் மசூதியில் திரிசூலம், தாமரை என சனாதான தர்ம அடையாளங்கள் இருப்பதாக ஆய்வு குழுவில் கமிஷனராக இருந்த வழக்கறிஞர் அஜய் மிஸ்ரா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அஜய் மிஸ்ரா தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மசூதியின் சில இடங்களில் நான் அனுமதிக்கப்படவில்லை. அங்கு உடைந்த இந்து சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 500-600 ஆண்டுகள் பழமையானதாகத் தெரிகிறது. மசூதி வளாகத்தில் ஒரு குவிமாடம் வடிவ அமைப்பு உள்ளது. இதனை இந்து அமைப்பினர் சிவலிங்கம் எனவும், மசூதி நிர்வாகம் நீரூற்று எனவும் கூறுகிறது. மேலும் சனாதன கலாச்சாரத்தின் பல அடையாளங்கள் மசூதிக்குள் உள்ளன. தாமரை, திரிசூலம் போன்றவை சுவர்களில் உள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஞானவாபி மசூதி பற்றி வாரணாசி கோர்ட்டு ஆணை ஏதும் பிறப்பிக்க வேண்டாம் என்றும், நாளை (வெள்ளிக்கிழமை) இது பற்றி தாங்கள் விசாரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாரணாசி சிவில் கோர்ட்டு உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட, வீடியோ சர்வே அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.