வருவாய் ஈட்டுவதில் எஸ்.சி., எஸ்.டி., முஸ்லிம்கள் அதிக பாகுபாட்டை சந்திக்கின்றனர்: அறிக்கையில் தகவல்
இந்தியாவில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் முஸ்லிம்கள் மற்ற பிரிவினரை விட மாத சம்பளம் மற்றும் சுய சம்பாத்தியத்தில் அதிக பாகுபாட்டை சந்திக்கின்றனர் என சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.;
புதுடெல்லி,
2022-ம் ஆண்டுக்கான இந்திய வேற்றுமை அறிக்கையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவது, வாழ்க்கை முறைகள் மற்றும் வேளாண் பலன்கள் உள்ளிட்ட விசயங்களை பெறுவதில் உள்ள ஒருசார்பு நிலை பற்றி, ஆய்வு செய்யப்பட்டு சுட்டி காட்டப்பட்டு உள்ளன.
ஆக்ஸ்பாம் இந்தியா என்ற அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளுக்கு, 2004-05-ம் ஆண்டு முதல் 2019-20-ம் ஆண்டு வரையிலான அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பற்றிய தரவுகள் அடிப்படையாக கொள்ளப்பட்டு உள்ளன. அதன் தலைவர் அமிதாப் பெஹார் கூறும்போது, சமூக மற்றும் நீதிநெறி சார்ந்ததுடன் அல்லாமல் பொருளாதார ரீதியிலும் சமூகத்தில் காணப்படும் வேற்றுமையால் பல பாதகங்கள் விளைகின்றன என கூறியுள்ளார்.
அந்த ஆய்வின்படி, சுய சம்பாத்தியம் மற்றும் பணிக்கு செல்லும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அல்லாத பிரிவினரை விட குறைவான அளவில் வருவாய் பெறுகின்றனர். இதேபோன்று முஸ்லிம் அல்லாதோரை விட முஸ்லிம்களும் இந்த வேற்றுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2019-20-ம் ஆண்டு கணக்கின்படி, மாத வருவாய் பெறும் 15 முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய நகர முஸ்லிம்களின் எண்ணிக்கை 15.6 சதவீதம் ஆகவும், முஸ்லிம் அல்லாதவர்கள் 23.3 சதவீதம் ஆகவும் உள்ளனர் என தெரிவிக்கிறது. இதேபோன்று, மேற்கூறிய இரு பிரிவினரில், மாத வருவாய் பெறும் பணியில் ஈடுபடும் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் 70 சதவீதம் குறைவாக உள்ளனர் என்றும் இதற்கு வேற்றுமை தன்மை அடிப்படையாக அமைகிறது என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
சுய சம்பாத்தியம் பெறும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் பெறும் வருவாய் ரூ.5 ஆயிரம் ஆகவும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் அல்லாதோருடனான ஊதிய வேற்றுமை 41 சதவீதம் என்றளவிலும் உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
கிராமப்புறத்தில் எடுத்து கொண்டால் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வேலைவாய்ப்பு பெறுவதில் வேற்றுமையுணர்வை சந்திப்பது விரைவாக அதிகரித்து வருகிறது.
2019-20-ம் ஆண்டு கணக்கின்படி, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவின் கூலி தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடு 79 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதற்கு அடிப்படையாக பாகுபாடு அமைந்துள்ளது. இந்த வேற்றுமை காணுதல் முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகம் ஆகும்.
இதேபோன்று கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இந்த விகிதம் 11.8-ல் இருந்து 40.9 சதவீதம் ஆக அதிகரித்தது. இந்த விகிதம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரில் 5.6 முதல் 28.3 ஆகவும், பொது பிரிவினரில் 5.4 முதல் 28.1 ஆகவும் அதிகரித்து காணப்பட்டது என அந்த அறிக்கை தெரிவிக்கினறது.
வருவாய் சரிவிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 13 சதவீதம் ஆக சரிந்தும், மற்றவர்களுக்கு 9 சதவீதம் சரிவும் காணப்பட்டது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையின்படி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களில் வருபவர்களான தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள், மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஆகியோர் வேலைவாய்ப்பு பெறுவதில், வாழ்க்கை முறைகள் மற்றும் வேளாண் பலன்களை பெறுவதிலும் வேற்றுமைதன்மையை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நகர்ப்புற எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரின் குறைந்தபட்ச மாத வருவாய் ரூ.15,312 ஆகவும், பொது பிரிவினரில் இந்த தொகை ரூ.20,346 ஆகவும் காணப்படுகிறது. இதனால், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரை விட பொது பிரிவினர் பெறக்கூடிய குறைந்தபட்ச சம்பளம் 33 சதவீதம் கூடுதலாக உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.
இதுவே சுய சம்பாத்தியத்தில் முறையே ரூ.10,533 மற்றும் ரூ.15,878 என்ற அளவில் உள்ளது. இது கிராமப்புறங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது என அறிக்கை தெரிவிக்கின்றது.
2004-05-ம் ஆண்டில் முஸ்லிம்கள் சந்தித்த வேற்றுமை தன்மை 59.3 சதவீதம் என்ற அளவில் இருந்து 2019-20-ம் ஆண்டில் 68.3 சதவீதம் என்ற அளவாக அதிகரித்து உள்ளது. 16 ஆண்டுகளில் இது 9 சதவீதம் அதிகம் ஆகும்.