பள்ளிகளின் நேரத்தை மாற்றுவது பற்றி கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை

பெங்களூருவில் பள்ளிகளின் நேரத்தை மாற்றுவது இன்று (வியாழக்கிழமை) கல்வித்துறை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க காலை 7.30 மணிக்கே பள்ளிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-10-04 21:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் பள்ளிகளின் நேரத்தை மாற்றுவது இன்று (வியாழக்கிழமை) கல்வித்துறை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க காலை 7.30 மணிக்கே பள்ளிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு நகரில் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார் போல் பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை சரி செய்ய மெட்ரோ ரெயில் திட்டம், மேம்பாலங்கள், வெளிவட்ட சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சியும், அரசும் மேற்கொண்டு வருகிறது.

மற்றொரு புறம் போக்குவரத்து போலீசாரும், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு வழிப்பாதை அமைத்தல், சிக்னல்கள் இல்லாத சாலைகளாக மாற்றுதல் என பல்வறேு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மட்டும் தீர்ந்தபாடில்லை. தொடர் விடுமுறை காரணமாக கடந்த 6 நாட்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் நேரத்தை மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டு சில யோசனைகளை வழங்கி இருந்தது. அதாவது தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி திறக்கும் நேரம் ஒரே மாதிரியாக இருப்பதால், பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றும்படியும், முன்கூட்டியே திறக்கும்படியும் அரசுக்கு சில அறிவுரைகளை ஐகோர்ட்டு வழங்கி இருந்தது.

ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பெங்களூருவில் பள்ளிகளின் நேரத்தை மாற்ற அரசும், பள்ளி கல்வித்துறையும் முன்வந்தது. இதற்கு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தங்களது பிள்ளைகள் படிப்பதால், காலையில் 6 மணிக்கே எழுந்திருக்க வேண்டும், காலையில் உணவு சாப்பிட வைக்க வேண்டும் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாக கூறினர்.

இன்று ஆலோசனை

இதையடுத்து, பள்ளிகளின் நேரத்தை மாற்றுவது தொடர்பாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புகள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பெற்றோருடன் பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்திவிட்டு, அவர்களது கருத்துகளை கேட்டு அறிந்து கொண்டு பெங்களூருவில் பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றப்படுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, தனியார் பள்ளி உரிமையாளர்களுடன் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் ரிதேஷ் குமார்சிங் ஆலோசனை நடத்த உள்ளார். பெங்களூரு கே.ஆர்.சர்க்கிள் அருகே உள்ள பள்ளி கல்லவித்துறை அலுவலகத்தில் இன்று 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது.

காலை 8 மணிக்கே திறப்பு?

இந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் பள்ளிகளுடன், பெங்களூரு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து துறை அதிகாரிகள், அரசு பள்ளிகளின் நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள், பள்ளிக்கூட வாகன ஓட்டுனர்கள் சங்கம், பெற்றோர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு அமைப்புகள், சங்கங்களை சேர்ந்த தலா 2 பிரதிநிதிகள் மட்டுமே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெங்களூருவில் பெரும்பாலான பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. சில பள்ளிகள் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3.30 மணி வரை நடைபெறுகிறது. எனவே பெங்களூருவில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக காலை 8 மணி அல்லது 7.30 மணிக்கு பள்ளி வகுப்புகளை தொடங்குவது குறித்து பள்ளி கல்வித்துறை முடிவு செய்திருப்பதாகவும், அதுபற்றி இன்று நடைபெறும் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேரம் மாற்றுவது உறுதி

இதன்மூலம் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணவும், மாணவ, மாணவிகளின் நலன் கருதியும் பள்ளிகள் திறக்கப்படும் நேரம் மாற்றப்படுவதுடன், முன்கூட்டியே திறக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இதற்கு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு, பெற்றோர் என்ன சொல்கிறார்கள்? என்பது தெரியவில்லை.

அதே நேரத்தில் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள ஜங்ஷன்களில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபட செய்வது, தனியார் வாகனங்களை தவிர்த்துவிட்டு அரசு பஸ்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி பெற்றோருக்கு அறிவுரை கூறவும் பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்