கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு மாணவனோடு போட்டோஷூட் நடத்திய பள்ளி ஆசிரியை சஸ்பெண்டு
சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் முருகமல்லா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். அந்த மாணவர்களோடு சென்ற பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதா, அதே பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஒருவனோடு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அதில் மாணவனும், ஆசிரியையும் முத்தமிடுவது போலவும், ஆசிரியை புஷ்பலதாவை மாணவன் தூக்கிவைத்திருப்பது போலவும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த போட்டோஷூட் சம்பவம் இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த புகைப்படங்கள் மிகவும் நெருக்கமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரி உமாதேவியிடம் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து கல்வி அதிகாரி உமாதேவி அளித்த அறிக்கையின் அடிப்படையில், தலைமை ஆசிரியை புஷ்பலதாவை சஸ்பெண்டு செய்து சிக்காபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.