மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
பங்காருபேட்டை அருகே பசுமாட்டை குளிப்பாட்ட அழைத்து சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் நடந்துள்ளது.;
பங்காருபேட்டை
பள்ளி மாணவன்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா தம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் பிரஜ்வல்(வயது 16). இந்த சிறுவன் பங்காருபேட்டை டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரஜ்வலுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வீட்டில் இருந்த பிரஜ்வல், பசுமாட்டை குளிப்பாட்ட முடிவு செய்தார்.
அதையடுத்து அவர் பெற்றோரிடம் கூறிவிட்டு பசுமாட்டை அழைத்துக் கொண்டு கிராமத்தையொட்டி உள்ள குளத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது அங்குள்ள மின்கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் கவனிக்காமல் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பிரஜ்வல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மின்சாரம் தாக்கியதில் அவரது கால் பகுதி மற்றும் உடல் பகுதி முற்றிலும் கருகி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பங்காருபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரஜ்வலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக பிரஜ்வலின் உடலைப் பார்த்து அவனது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இச்சம்பவம் குறித்து பங்காருபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.