ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

நண்பர்களுடன் குளிக்க சென்ற பத்ரா ஆற்றில் மூழ்கி பள்ளிக்கூட மாணவன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-07 04:30 GMT

சிக்கமகளூரு-

8-ம் வகுப்பு மாணவன்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா அருகே உள்ள லிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்போ. இவரது மனைவி சாலி. இவர்களது மகன் நிஷான்(வயது 14). இவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நிஷான், அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் 5 பேருடன் லிங்கபுரத்தில் உள்ள பத்ரா ஆற்றில் குளிப்பதற்காக நேற்று முன்தினம் சென்றான்.

இதையடுத்து அனைவரும் ஆற்றில் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது நிஷான் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் அவர் எதிர்பாராதமாக ஆற்றில் இருந்த சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். அப்போது அருகில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய நிஷானை மீட்க முயன்றனர். ஆனால் நிஷானை மீட்க முடியவில்லை.

ஆற்றில் மூழ்கி சாவு

இதையடுத்து அவர்கள் என்.ஆர்.புரா தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து நிஷானை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு பின்னர் நிஷானை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த என்.ஆர்.புரா போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற 8-ம் வகுப்பு மாணவன் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்