பெங்களூரு:
பெலகாவி மாவட்டம் கேம்ப் பகுதி அருகே வசிக்கும் தம்பதியின் மகள் அதிகா. இவரது சகோதரர் ஆயுஷ்(வயது 8). நேற்று காலையில் அந்த சிறுவன் தனது சகோதரியுடன் ஸ்கூட்டரில் பள்ளிக்கு புறப்பட்டான். கேம்ப் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெலகாகி-கானாப்பூர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல 2 பேரும் ஸ்கூட்டரில் காத்திருந்தனர்.
அப்போது அதே சாலையில் வந்த ஒரு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி அந்த சாலையில் நின்ற ஒரு கார், அதிகாவின் ஸ்கூட்டர் மற்றும் ஒரு ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் மாணவன் ஆயுஷ் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிர் இழந்தான். அதிகா உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவன் பலியானது பற்றி அறிந்ததும் உறவினர்கள், கிராம மக்கள் விரைந்து வந்து லாரி டிரைவரை பிடித்து தர்ம-அடி கொடுத்தார்கள். லாரியின் கண்ணாடியை கற்களை வீசியும், உருட்டு கட்டைகளால் தாக்கியும் உடைத்தாா்கள்.
பின்னர் பெலகாவி-கானாப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டு மாணவன் சாவுக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் துணை போலீஸ் கமிஷனர் சினேகா, அனில் பெனகே எம்.எல்.ஏ. ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தார்கள்.