'நாடாளுமன்றத்தில் செங்கோல்; கடந்த காலத்தின் சின்னத்தை ஏற்றுக்கொள்வோம்' - சசி தரூர் கருத்து

செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பு வாதங்களும் சரியானது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-28 09:54 GMT

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திறப்பு விழா 2 கட்டங்களாக நடைபெற்றது. காலையில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

அதே சமயம் பா.ஜ.க.வினர் கூறுவதைப் போல இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், நாடாளுமன்ற மக்களவையில் செங்கோல் நிறுவப்பட்டிருப்பதன் மூலம் இறையாண்மை எந்த மன்னரிடமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பு வாதங்களும் சரியானது என்பதே எனது கருத்து. புனிதமான இறையாண்மை மற்றும் தர்மத்தின் ஆட்சியை உள்ளடக்கிய செங்கோல், பாரம்பரியத்தின் தொடர்ச்சியை பிரதிபலிக்கிறது என்று அரசாங்கம் சரியாக வாதிடுகிறது. அதே சமயம் அரசியலமைப்பு மக்களின் பெயரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இறையாண்மை என்பது இந்திய மக்களிடம் தங்களுடைய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்றும், அது தெய்வீக உரிமையால் வழங்கப்பட்ட அரச சிறப்புரிமை அல்ல என்றும் எதிர்க்கட்சிகள் சரியாக வாதிடுகின்றன.

நேருவிடம் மவுண்ட்பேட்டன் அதிகாரப் பரிமாற்றத்தை அடையாளப்படுத்துவதற்காகக் செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆதாரமற்ற நிகழ்வு குறித்த விவாதத்தை நாம் கைவிட்டால், இரண்டு தரப்புகளும் சமரசம் ஆகும். செங்கோல் என்பது சக்தி மற்றும் அதிகாரத்தின் பாரம்பரிய சின்னம் என்றும், அதை மக்களவையில் வைப்பதன் மூலம், இறையாண்மை அங்கு உள்ளது, எந்த மன்னரிடமும் இல்லை என்பதையும் இந்தியா உறுதிப்படுத்துகிறது. நமது நிகழ்காலத்தின் மதிப்புகளை உறுதிப்படுத்த கடந்த காலத்தின் சின்னத்தை ஏற்றுக்கொள்வோம்."

இவ்வாறு சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்