காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் - அமித்ஷா
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
சிர்சா,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பா.ஜனதா சார்பில் அரியானாவில் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்து கொண்டார்.
அரியானாவின் சிர்சாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி பேசினார்.
அத்துடன் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஊழல் குற்றச்சாட்டு இல்லை
9 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.12 லட்சம் கோடி அளவிலான ஊழல்களை செய்ததை நினைத்துப்பாருங்கள்.
ஆனால் இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கூட எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் குறிப்பிட முடியவில்லை.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்த்தபோதும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ மோடி அரசு உறுதியாக நீக்கியது.
பயங்கரவாதிகளுக்கு பதிலடி
9 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து நமது வீரர்களின் தலையை துண்டித்து செல்வார்கள். அப்போது மன்மோகன் சிங் மற்றும் சோனியா அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது.
ஆனால் மோடி தலைமையிலான அரசு உரி, புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. 9 ஆண்டுகளில் இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டார். அரியானாவில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 3டி அரசாக இருந்தது. அதாவது தர்பாரிகள் (மன்றத்தினர்), தாமத் (மருமகன்) மற்றும் டீலர்களுக்கான அரசாக இருந்தது என்று அமித்ஷா கூறினார்.
முன்னதாக பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.