எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆக அதிகரிக்கப்படும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-16 10:59 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கத் தொடங்கி உள்ளன. அவ்வகையில், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு சமூகத்தின் பொருளாதார நிலையை உணர்ந்து திட்டங்கள் வகுக்கப்படும்.

ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்தப்படும். முக்கிய அரசு பணிகளில் ஒப்பந்த பணியாளர் நியமன முறை ரத்து செய்யப்படும். தனியார் நிறுவன தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்ய சட்டங்கள் திருத்தப்படும். அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், ஆயுள், விபத்து காப்பீடு செயல்படுத்தப்படும்.

மேலும், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதமாக உயர்த்தப்படும். 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்