குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 220க்கும் மேற்பட்ட மனுக்கள்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் அக்டோபர் 31ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றன.;

Update: 2022-09-12 14:45 GMT

புதுடெல்லி,

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த(முஸ்லிமல்லாத) இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் செயல்முறையை இந்திய குடியுரிமை திருத்த சட்டம் வழங்குகிறது.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியுரிமை (திருத்தம்) மசோதா-2019இல், 12 டிசம்பர் 2019 அன்று கையெழுத்திட்டு அதற்கு சட்ட வடிவத்தை வழங்கினார். 10 ஜனவரி 2020 முதல் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட பல மனுக்கள் அக்டோபர் 31ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனு, முதலில் 18 டிசம்பர் 2019 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் கடைசி விசாரணை 15 ஜூன் 2021 அன்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்களை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் பதில் கேட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டியலின்படி, சிஏஏ சட்டத்துக்கு எதிரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முக்கிய மனு உட்பட 220 மனுக்கள், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 220க்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்