தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்தது எஸ்.பி.ஐ. வங்கி
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
புதுடெல்லி,
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு எஸ்.பி.ஐ. வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. வங்கி தேர்தல் பத்திரங்களை பெற்றவர்களின் விவரங்களை அளித்தது. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் பகிர்ந்தது. இதில் தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதையடுத்து, தேர்தல் பத்திரத்தின் எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு அவர் நிதி வழங்கியுள்ளார், எவ்வளவு பணம், டெனாமினேசன், ஆகியவற்றை வழங்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பத்திரத்தில் உள்ள தனி அடையாள எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யாதது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பியதுடன், எஸ்.பி.ஐ. வங்கியின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் வியாழன் கிழமை(இன்று) மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண் உள்ளிட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி சமர்ப்பித்தது. இந்த விபரங்களை தேர்தல் ஆணையம் விரைவில் பொது வெளியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.