கார் விற்பனைக்கு இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.1.90 லட்சம் நூதன மோசடி
கார் விற்பனைக்கு இருப்பதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.90 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
சிவமொக்கா;
பழைய கார்...
சிவமொக்கா டவுன் வித்யா நகர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பழைய கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது செல்போன் மூலம் ஆன்லைனில் பழைய கார்களை தேடிபார்த்தார். அப்போது அவர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார்.
அதில் பழைய கார் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. அதை நம்பிய அந்த பெண் உடனடியாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
காரை ஒப்படைக்கவில்லை
அப்போது எதிர் முனையில் பேசியவர், காருக்கான காப்பீடு மற்றும் பிற ஆவணங்களை தயார் செய்ய ரூ.1.90 லட்சம் தேவைப்படும் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பிய அந்த பெண் ரூ.1.90 லட்சத்தையும் கொடுக்க ஒப்புக்கொண்டார்.
மேலும் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் அப்பெண் ரூ.1.90 லட்சத்தை செலுத்தினார். ஆனால் வெகு நாட்கள் ஆகியும் அந்த நபர் ஆவணங்களை தயார் செய்து அந்த பெண்ணிடம் காரை ஒப்படைக்கவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண், மீண்டும் அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தார். அப்போது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
வலைவீச்சு
அப்போதுதான் தன்னை அந்த நபர் ஏமாற்றி ரூ.1.90 லட்சத்தை மோசடி செய்ததை அப்பெண் உணர்ந்தார். பின்னர் இதுபற்றி அவர் வித்யாநகர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இந்த நூதன மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.