தார்வாரில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.13½ லட்சம் மோசடி

தார்வாரில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-07-25 18:45 GMT

உப்பள்ளி-

தார்வார் நகரில் உள்ள ஏலக்கி செட்டார் காலனியை சேர்ந்தவர் தீபக். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் தீபக்கிற்கு பழக்கமாகினார். அப்போது அந்த பெண், தான் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறினார். பின்னர் அந்த பெண், தங்கள் நிறுவனத்தில் பகுதி நேர வேலை பார்ப்பதற்கு ஆட்கள் தேவை. கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என்று கூறினார்.

இதை கேட்ட தீபக், பகுதி நேர வேலையில் சேர விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் செல்போன் மூலம் பேச தொடங்கினர். அப்போது அந்த பெண், தீபக்கிடம் பகுதி நேர வேலை கிடைப்பது உறுதியாகிவிட்டது. அதற்கு முன்னதாக சம்பளம் அனுப்பி வைப்பதற்கான வங்கி கணக்கு விவரங்களை வழங்கும்படி கூறினார். இதை நம்பிய தீபக் அந்த பெண் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்தார்.

அதை பெண் வாங்கி, சில மணி நேரத்தில் தீபக்கின் வங்கி கணக்கில் இருந்து 3 தவணையாக ரூ.13.52 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபக் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்தார்.

ஆனால் அந்த பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ஏமாற்றம் அடைந்ததை அறிந்த தீபக் இதுகுறித்து தார்வார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்