சந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகானை கட்சியில் இருந்து நீக்கிய திரிணாமுல் காங்கிரஸ்
ஷேக் ஷாஜகானுக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பஷீர்ஹத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஷேக் ஷாஜகான். இவரும், இவருடைய ஆதரவாளர்களும் சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர் என்றும் அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டனர் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்த வழக்கில் அவருடைய உதவியாளர்கள், ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும், ஷாஜகான் பிடிபடாமல் தப்பி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ந்தேதி கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிறப்பித்த தனது உத்தரவில், ஷேக் ஷாஜகானையும் இந்த வழக்கில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.
அவரை கைது செய்யாமல் இருக்க எந்த முகாந்திரமும் இல்லை என கூறினார். இந்த வகையில் பொது நோட்டீஸ் ஒன்றையும் வழங்க உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
இதன்படி, பல நாட்களாக அவரை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஷாஜகானை சிறப்பு வங்காள போலீசார் அடங்கிய குழு நேற்றிரவு கைது செய்தது. 55 நாட்களாக போலீசார் பிடியில் சிக்காமல் தப்பி வந்த நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்பின் கைது செய்யப்பட்ட ஷாஜகானை பஷீர்ஹத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஷாஜகான் கைது செய்யப்பட்டதை சந்தேஷ்காலி பெண்கள் உற்சாகமாய்க் கொண்டாடினர்.
இந்நிலையில், ஷேக் ஷாஜகான் போலீசாரால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஷாஜகானை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி உள்ளதாக திரிணாமுல் அறிவித்தது. இதுகுறித்து கட்சியின் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டெரெக் ஓ பிரையன் பேசுகையில், ஷேக் ஷாஜகானை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.