சனாதனம் குறித்து பேசிய விவகாரம்; உதயநிதி ஸ்டாலினின் மனுவுக்கு 5 மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

உதயநிதி ஸ்டாலினின் மனு தொடர்பாக 5 மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-10 12:51 GMT

புதுடெல்லி,

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி 14 ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்பட மொத்தம் 262 பேர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு கடிதம் எழுதினர். மேலும் பல்வேறு மாநில கோர்ட்டுகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனிடையே தன் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், சாதி ஒழிப்பு கொள்கையை பின்பற்றுவோர் முன்னிலையில் பேசப்பட்ட தனது பேச்சை, சாதி பாகுபாட்டின் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் எனவும், திராவிட இயக்கத்தின் தலைவர்கள் பேசியதையே தானும் பேசியிருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த மனு கடந்த முறை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பிரிவு 32-ன் கீழ் மனுவை தாக்கல் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பிரிவு 406-ன் கீழ் மனுவை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் திருத்தப்பட்ட ரிட் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உதயநிதி ஸ்டாலினின் மனு தொடர்பாக மராட்டிய மாநிலம், உத்தர பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகளும் புகார்தாரர்களும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்