சபரிமலை தரிசனம்: 10 வயது சிறுமியின் மனுவை தள்ளுபடி செய்தது கேரள ஐகோர்ட்டு
மண்டல பூஜை நிறைவடைந்துவிட்டதால், மாதாந்திர பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.;
கொச்சி:
சபரிமலைக்கு யாத்திரை சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி கேட்டு, பெங்களூருவைச் சேர்ந்த ஸ்னிக்தா ஸ்ரீநாத் என்ற 10 வயது சிறுமி, கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது தந்தை மூலம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், மண்டல பூஜை-மகரவிளக்கு காலத்தில் சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலுக்கு யாத்திரை செல்ல தனக்கு தகுதி இருப்பதாகவும், வயது வரம்பை கணக்கில் கொள்ளாமல் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தான் பருவம் அடையவில்லை என்பதால், சபரிமலைக்கு யாத்திரை செல்வதற்கு எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது மண்டல பூஜை நிறைவடைந்துவிட்டதால், மாதாந்திர பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஹரிசங்கர் வி.மேனன் ஆகியோர் விசாரித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது சிறுமியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கில் முடிவு எடுக்க முடியாது என தெரிவித்தனர். மேலும், தேவசம் போர்டு அதன் கடமைகளை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செய்ய கடமைப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல அனுமதி இல்லை என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.