பக்தர்கள் கூட்டத்தால் திணறும் சபரிமலை அய்யப்பன் கோவில்..!

சபரிமலையில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகிறார்கள்.

Update: 2023-12-12 15:14 GMT

சபரிமலை,

மகர விளக்கு, மண்டலபூஜை சீசனையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பக்தர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், தற்போது கட்டுக்கடங்காத கூட்டத்தால் இருமுடி கட்டிய பக்தர்கள், அய்யப்பன் வளர்ந்த இடமான பந்தள அரண்மனையில் உள்ள வலியக்கோயில் அய்யப்பனை தரிசனம் செய்து, அங்கு தாங்கள் கொண்டு வந்த இருமுடியை உடைத்து நெய் அபிஷேகம் செய்து, ஊர் திரும்புகின்றனர். பம்பை, நிலக்கல், எரிமேலி, பத்தனம்திட்டா உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். பதினெட்டாம் படியில் ஏற 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுவதாகவும் காட்டுப்பாதை வழியே பலர் உள்ளே நுழைவதாலும், சிக்கல்கள் எழுவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் திணறி வருகின்றனர். 

பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்