தொடக்கத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசிய கொடியை ஏற்கவில்லை; சித்தராமையா குற்றச்சாட்டு
தொடக்கத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசிய கொடியை ஏற்கவில்லை என்று சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
உப்பள்ளி:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விலகி வந்தது நல்லதே
எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது அவரை மாற்றுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் அவரது மாற்றம் குறித்து நான் முன்கூட்டியே கூறினேன். ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றுவது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரியாது. வருகிற சட்டசபை தேர்தலில் நான் மீண்டும் பாதாமி தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நான் பல்வேறு மாவட்டங்களுக்கு பாதயாத்திரைக்காக செல்கிறேன். அங்கு எல்லாம் போட்டியிட முடியுமா?.
தற்போதைக்கு நான் பாதாமி தொகுதி சட்டசபை உறுப்பினர். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை உங்களுக்கு நானே தெரிவிக்கிறேன். பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நல்ல பணிகளை செய்துள்ளார். தான் யார் என்பதை பா.ஜனதாவுக்கு அவர் காட்டியுள்ளார். அவர் ஒரு சமத்துவவாதி. அதனால் அவர் மதவாத கட்சியின் கூட்டணியை விட்டு விலகி வந்தது நல்லதே.
விளக்கம் கொடுக்கவில்லை
தொடக்கத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசிய கொடியை ஏற்கவில்லை. அதுபற்றி பா.ஜனதா விளக்கம் கொடுக்கவில்லை. நமது தேசிய கொடி, அரசியல் சாசனத்திற்கு எதிராக அந்த அமைப்பினர் கருத்து கூறினர். நாக்பூரில் உள்ள அந்த அமைப்புன் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றனார்களா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.