'ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்
ஆர்.எஸ்.எஸ். பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.;
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஐகோர்ட்டில் 45 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், பொதுச்சாலைகளில் பேரணி நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, "தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால் வீதிதோறும் பேரணியை அனுமதிக்க முடியாது என்றும், சுற்றுச்சுவருக்குள், விளையாட்டு அரங்கம் போன்றவற்றில் நடத்துவதற்கு அனுமதி வழங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. அதை ஐகோர்ட்டு தனிநீதிபதி ஏற்று உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இரு நீதிபதிகள் அமர்வு, விருப்பப்படும் இடங்களில் பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரணி மார்ச் 5-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக வெள்ளிக்கிழமை விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.
அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஆர்.எஸ்.எஸ். பேரணி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "ஆர்.எஸ்.எஸ். பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை. சுற்றுச்சுவருடன் கூடிய அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கியம். உளவுத் துறையின் அறிக்கைகளை புறக்கணித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி விட முடியாது" என்று வாதிட்டார்.
அதே சமயம், தி.மு.க. மற்றும் வி.சி.க. பேரணிகளுக்கு அனுமதி அளித்துவிட்டு தங்கள் பேரணிக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணையை மார்ச் 17-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.