அரசு பஸ்சில் இலவச பயண திட்டத்தால் 10 நாட்களில் ரூ.100 கோடி செலவு

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் கர்நாடக அரசுக்கு 10 நாட்களில் ரூ.100 கோடி செலவாகியுள்ளது.

Update: 2023-06-20 18:45 GMT

பெங்களூரு:-

இலவசமாக பயணிக்கலாம்

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாக கடந்த மே மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 11-ந் தேதி அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி கர்நாடகத்தை சேர்ந்த பெண்கள் சொகுசு பஸ்களை தவிர மற்ற அனைத்து பஸ்களிலும் கர்நாடகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம். இதன் காரணமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் அரசு பஸ்களில் பயணிக்க தொடங்கியுள்ளனர். பெங்களூருவில் ஆட்டோக்களில் சென்ற பெண்கள் தற்போது பி.எம்.டி.சி. பஸ்களில் அதிகமாக பயணிக்கிறார்கள்.

ரூ.100 கோடியை தாண்டியது

இதனால் அரசு நகர மற்றும் புறகநர் பஸ்களில் பெண் பயணிகள் நிரம்பி வழிகிறார்கள். இந்த நிலையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 நாட்கள் நிறைவடைந்தது. இந்த 10 நாட்களில் மொத்தம் 4 கோடியே 24 லட்சத்து 60 ஆயிரத்து 89 பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

இந்த பெண்களின் இலவச பயணத்திற்கான செலவு ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. அதாவது ரூ.100 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரத்து 338 செலவாகியுள்ளது.

10 நாட்களுக்கு ரூ.100 கோடி என்றால் மாதம் ரூ.300 கோடி ஆகும். அதன்படி கணக்கிட்டால், இந்த இலவச பயண திட்டத்திற்கு அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,600 கோடி செலவாகும். ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது, அரசு இதற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்