கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தியவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்
கிரெடிட் கார்டு மூலம் மின்கட்டணம் செலுத்தியவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது
பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே துபரஹள்ளியில் வசித்து வருபவர் சுந்தர்(வயது 42). இவர் தனது வீட்டின் மின்கட்டணத்தை கிரெடிட் கார்டு(கடன் அட்டை) மூலம் செலுத்தினார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் சுந்தரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் தன்னை பெஸ்காம் ஊழியர் என்று கூறினார். அப்போது கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் செலுத்திய மின்கட்டணம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் செலுத்தும்படி கூறினார். அதன்படி சுந்தர் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் ரூ.11 செலுத்தினார்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் சுந்தரின் செல்போன் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் உங்களது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.98 ஆயிரம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. அப்போது தான் தன்னை ஏமாற்றி மர்மநபர் ரூ.98 ஆயிரத்தை அபேஸ் செய்தது சுந்தருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சுந்தர் அளித்த புகாரின்பேரில் ஒயிட்பீல்டு போலீசார் மர்மநபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.