ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுவன் மீட்பு; நேபாள காவலாளி கைது; பெண்ணுக்கு வலைவீச்சு
பெங்களூருவில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுவனை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக நேபாளத்தை சேர்ந்த காவலாளி கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் ஒரு பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.;
பெங்களூரு: பெங்களூருவில் ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுவனை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக நேபாளத்தை சேர்ந்த காவலாளி கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் ஒரு பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
சிறுவன் கடத்தல்
பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உரமாவு பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ். இவர் பி.எம்.டி.சி. டிரைவர் ஆவார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சிறுவன் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நின்று சிறுவன் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அங்கு வந்த ஒரு பெண் சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த சிறுவனை பெண் தன்னுடன் அழைத்து சென்றார்.
இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சுபாசின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர்கள் உனது மகனை நாங்கள் தான் கடத்தி வைத்து உள்ளோம். ரூ.50 லட்சம் தந்தால் தான் விடுவிப்போம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து உள்ளனர்.
பண்ணை வீட்டில் மீட்பு
இதனால் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சம்பவம் குறித்து ஹெண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மர்மநபர்கள் பேசிய செல்போன் எண்ணையும் அவர் போலீசாரிடம் கொடுத்து இருந்தார். இதையடுத்து அந்த எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்த போது, அந்த செல்போன் எண் ஜிகனி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து செயல்பட்டு கொண்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஹெண்ணூர் போலீசார் உடனடியாக ஜிகனியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று அங்கு ஒரு அறையில் கட்டி வைக்கப்பட்டு இருந்த சிறுவனை மீட்டனர். மேலும் அந்த வீட்டில் இருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரிடம் இருந்து பெண் தப்பி ஓடிவிட்டார். ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
பெண்ணுக்கு வலைவீச்சு
விசாரணையில் அவரது பெயர் கவுரவ் சிங் என்பதும், நேபாளத்தை சேர்ந்த அவர் பெங்களூருவில் காவலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சிறுவனை அந்த பெண் கடத்தி வந்து, கவுரவ் சிங்கிடம் ஒப்படைத்து இருந்ததும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுவனை அவனது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கைதான கவுரவ் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தப்பி ஓடிய பெண்ணை வலைவீசி தேடிவருகின்றனர்.