விவசாயியை தாக்கி ரூ.5 லட்சம் கொள்ளை; 2 பேருக்கு வலைவீச்சு

சொரப் அருகே விவசாயியை தாக்கி ரூ.5 லட்சம் கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update: 2022-06-21 15:18 GMT

சிவமொக்கா;

விவசாயி

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா காசபாடிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் தம்மன்னா. விவசாயியான இவருக்கு சொந்தமாக பாக்குத்தோட்டம் உள்ளது.இவரது பாக்குத்தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இவர், தனது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சொரப் டவுனில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.5 லட்சம் எடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.


ரூ.5 லட்சம் கொள்ளை

இதனையறிந்த மர்மநபர்கள் 2 பேர் பணத்தை கொள்ளையடிக்க மோட்டார் சைக்கிளில், தம்மன்னாவை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் சிறிதுதூரத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து 2 பேரும் மோட்டார் சைக்கிளை குறுக்கேவிட்டு தம்மன்னா மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

பின்னர் 2 பேரும் கீழே இறங்கி தம்மன்னாவிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணத்தை தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை கொடுக்க தம்மன்னா மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும், தம்மன்னாவை தாக்கி ரூ.5 லட்சத்தை பையுடன் கொள்ளையடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதனால் தம்மன்னா செய்வதறியாது திகைத்தார். இதுகுறித்து தம்மன்னா சொரப் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்