அக்னிபத் போராட்டம்: பீகார் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ரூ.3 லட்சம் கொள்ளை
பீகாரில் அக்னிபத் போராட்டத்தின்போது, ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.;
அர்ரா,
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வடமாநிலங்களில் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அக்னிபத் திட்ட விவகாரத்தில் இளைஞர்களை சில அரசியல் கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன என்று மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், பீகாரின் பெட்டையா நகரில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைவர் சஞ்ஜய் ஜெய்ஸ்வாலின் இல்லம் மீது இன்று தாக்குதல் நடந்துள்ளது. ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மூத்த தலைவர்கள் மீது ஒரே நாளில் நடைபெறும் 2வது தாக்குதல் இதுவாகும்.
இதுபற்றி ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறும்போது, தாக்குதல் நடத்திய பலரை நான் அடையாளம் கண்டுள்ளேன். அவர்கள் யாரும் ராணுவத்தில் சேருபவர்கள் அல்ல.
திட்டமிட்ட சதியுடனேயே எனது வீடு தாக்கப்பட்டு உள்ளது. கல்வீச்சும் நடந்துள்ளது. டீசல் ஊற்றி கொளுத்தும் முயற்சிகளும் நடந்துள்ளன. சமையல் கியாஸ் சிலிண்டர் குண்டு ஒன்றையும் அந்த கும்பல் விட்டு சென்றுள்ளது.
இதனால், எனது வீட்டை குண்டு வைத்து வெடிக்க செய்யும் நோக்கத்துடனேயே அந்த கும்பல் வந்துள்ளது தெளிவாக தெரிகிறது என்று அவர் கூறியுள்ளார். சம்பவம் நடந்தபோது, வீட்டிலேயே நான் இருந்தேன். தாக்குதல் நடத்த வந்தவர்கள் குறைந்தது 100 பேராவது இருப்பார்கள் என கூறியுள்ளார்.
பீகாரின் சம்பரான் மாவட்டத்தின் பச்சிம் பகுதியில் துணை முதல்-மந்திரி ரேணு தேவியின் வீடு மீதும் இன்று கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சென்றது. ஆனால், சம்பவத்தின்போது அவர் வீட்டில் இல்லை. இதேபோன்று, பீகாரின் அர்ரா நகரில் பிஹியா ரெயில் நிலையத்தில் வழக்கம்போல் பயணிகளுக்கு இன்று டிக்கெட் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி டிக்கெட் வழங்கல் அதிகாரி (பொறுப்பு) கூறும்போது, நாங்கள் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி கொண்டிருந்தோம். அப்போது பெருங்கூட்டம் ஒன்று கற்களை தூக்கி வீசினர். பின்னர் தீ வைத்தனர். ரூ.3 லட்சம் பணமும் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.