பெண் வக்கீல் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-பணம் திருட்டு; மா்மநபர்களுக்கு வலைவீச்சு
உடுப்பி அருகே பட்டப்பகலில் பெண் வக்கீல் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;
மங்களூரு;
பெண் வக்கீல்
உடுப்பி டவுனில் வசித்து வருபவர் வாணிராவ். இவர், வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வாணிராவ், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதையறிந்த மா்மநபா்கள் சிலர் வாணிராவ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பின்னர் வீட்டின் படுக்கை அறையில் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
ரூ.25 லட்சம் மதிப்பு
இதற்கிடையே மதியம் வீட்டிற்கு வந்த வாணிராவ், வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தார்.அப்போது படுக்கை அறையில் இருந்த லாக்கர் உடைந்து கிடந்து, அதில் இருந்த 30 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
வலைவீச்சு
அப்போது தான் அவருக்கு மர்மநபர்கள் வீடுபுகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வாணிராவ், உடுப்பி டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் மோப்பநாயை வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நாய், மோப்பம் பிடித்து சிறிதுதூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இதையடுத்து தடயவியல் நிபுணர் வந்து, திருட்டு நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை சோதனை செய்தனர். இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபா்களை வலைவீசி தேடிவருகின்றனர்.