ரூ.13,500 கோடி மோசடி வழக்கு; மெகுல் சோக்சிக்கு எதிரான ரெட்-கார்னர் நோட்டீஸ் வாபஸ்
ரூ.13,500 கோடி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்ட மெகுல் சோக்சிக்கு எதிரான ரெட்-கார்னர் நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக தலைமறைவாகினர்.
இந்த பணமோசடி பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிய வந்தது. முறைகேடு புகார் கிளம்பவும் இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணை மேற்கொண்டன.
பஞ்சாப் தேசிய வங்கியின் துணை மேலாளர் அளித்த புகாரின் பேரில் பதிவான 3 வழக்குகள் உள்பட மெகுல் சோக்சி மற்றும் அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது.
நிரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில், மெகுல் ஷோக்சி கரீபியன் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் பெற்றார். ஆன்டிகுவாவில் கடந்த 2018-ம் ஆண்டு குடியுரிமையும் பெற்று கொண்டார்.
தேடப்படும் நபர்களை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆன்டிகுவா இல்லை. எனினும், அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டன. மெகுல் சோக்ஷிக்கு எதிராக இண்டர்போல் சார்பில் ரெட்-கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு வாபஸ் பெற முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறும்போது, இறுதியாக உண்மை வெளிவந்து விட்டது. எனது கட்சிக்காரரை கடத்தும் முயற்சிக்கு சர்வதேச சமூகம் ஒப்புதல் வழங்கவில்லை.
அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட்-கார்னர் நோட்டீஸ் உத்தரவை இண்டர்போல் நீக்கியுள்ளது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, இந்த விவகாரம் பற்றி சட்ட வல்லுனர்கள், இண்டர்போலிடம் சென்று முறையிட்டனர். இதனால், நோட்டீஸ் உத்தரவு ரத்து ஆகியுள்ளது. இந்தியாவை தவிர அவர் வேறு எந்த நாட்டுக்கும் செல்ல முடியும்.
இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. ரெட்-கார்னர் நோட்டீசானது, சோக்சி வேறு நாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவரை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது.
இனி அந்த ஆபத்து அவருக்கு இருக்காது என்று கூறியுள்ளார். எனது கட்சிக்காரரின் பல்வேறு நிலைமைகளை பார்த்து பின்னர், இந்த முடிவை இண்டர்போல் எடுத்து உள்ளது.
நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பியோடிய நபர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது வழக்கு விசாரணைகளும் நடந்து வருகின்றன. ஆனால், சோக்சி விசயத்தில், தப்பியோடிய நபராக வழக்கு விசாரணை நடத்துவதில் இருந்து மும்பை ஐகோர்ட்டிடம் இடைக்கால தடை வாங்கி உள்ளேன் என வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறியுள்ளார்.