லாட்டரி சீட்டில் ரூ.1 கோடி பரிசு... மூதாட்டியை ஏமாற்றிய விற்பனையாளர் கைது

லாட்டரியில் மூதாட்டிக்கு முதல் பரிசு கிடைத்த விஷயம் தெரியவில்லை.;

Update: 2024-05-20 08:02 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தெருவோர கடை ஒன்றை நடத்தி வருபவர் சுகுமாரியம்மா (72). இவர் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது அந்த பகுதியில், பிழைப்புக்காக தெருவோர கடை நடத்தி வருகிறார். இவருக்கு அடிக்கடி லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற குலுக்கலில் அவர் வாங்கிய சீட்டுக்கு முதல் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அவரிடம் இருந்த எப்ஜி. 348822 என்ற எண் டிக்கெட்டிற்கு முதல் பரிசுத்தொகை கிடைத்தது. ஆனால் லாட்டரி ரிசல்ட் எதுவும் பார்க்க தெரியாத அந்த மூதாட்டிக்கு இந்த முதல் பரிசு கிடைத்த விஷயம் தெரியவில்லை.

இதற்கிடையே, சுகுமாரியம்மாவிடம் லாட்டரி டிக்கெட்டை விற்ற கண்ணன் என்ற லாட்டரி விற்பனையாளர் உங்கள் டிக்கெட்டிற்கு ரூ. 500 ரூபாய் பரிசு அடித்துள்ளதாக மொத்த டிக்கெட்டையும் வாங்கி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து தவறாக சொல்லிவிட்டேன் பரிசு எதுவும் விழவில்லை என்றும் ரூ.100 வைத்துக் கொள்ளுங்கள் என கூறி கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

முதல் பரிசு தொகை கிடைத்த லாட்டரியுடன் தனது ஊருக்கு சென்ற கண்ணன் ரூ.1 கோடி விழுந்து விட்டதாக கூறி லட்டு கொடுத்து கொண்டாடியிருக்கிறார். அப்போது கண்ணன், லாட்டரி விற்பனை செய்யும் பாளையம் பகுதியில் லாட்டரி கடை வைத்து இருக்கும் ராதாகிருஷ்ணன் என்பவர் தனது நண்பரும் லாட்டரி கடை வைத்திருப்பவருமான பிரபா என்பவரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிரபாவிற்கு சுகுமாரியம்மாவை நன்றாக தெரியும். இதனால், சந்தேகம் அடைந்த பிரபா, சுகுமாரியம்மாவிடம் இது குறித்து விசாரித்து இருக்கிறார். அப்போது தான், சுகுமாரியம்மா ஏமாற்றப்பட்ட விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து லாட்டரி துறையிடம் சுகுமாரியம்மா நடந்த விஷயம் குறித்து புகார் அளித்துள்ளார். அதிகாரிகள், காவல்துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து சுகுமாரியம்மா காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த கண்ணனையும் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சுகுமாரியம்மாவை ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, வழக்குபதிவு செய்து கண்ணனை போலீசார் சிறையில் அடைத்தனர். கண்ணனிடம் பறிமுதல் செய்த டிக்கெட்டுகள் 2 நாட்களில் சுகுமாரியம்மாவிடம் ஒப்படைக்கபடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சொந்தமாக ஒரு இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதுதான் எனது கனவு. எனக்கு விரைவில் பரிசுத்தொகை கிடைக்கும் என நம்புகிறேன்" என்று சுகுமாரியம்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்