நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 12 பொருட்களும் எங்கு உள்ளது?

நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் 12 பொருட்களும் எங்கு உள்ளது? என்பது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி விளக்கம் அளித்து உள்ளார்.

Update: 2022-12-05 21:40 GMT

பெங்களூரு:

நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் 12 பொருட்களும் எங்கு உள்ளது? என்பது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி விளக்கம் அளித்து உள்ளார்.

வீடு ஒதுக்கப்படவில்லை

கர்நாடக அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வருபவர் ரோகிணி சிந்தூரி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் மைசூரு விருந்தினர் மாளிகையில் இருந்து 12 பொருட்களை எடுத்து சென்றதாக ரோகிணி சிந்தூரி மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதாவது மைசூரு மாவட்ட கலெக்டராக 2017-ம் ஆண்டு ரோகிணி சிந்தூரி பொறுப்பேற்ற போது அவருக்கு கலெக்டருக்கான வீடு உடனடியாக ஒதுக்கி கொடுக்கப்படவில்லை.

இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் மைசூருவில் உள்ள அரசுக்கு சொந்தமான நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் தங்கி இருந்தார். 40 நாட்கள் அங்கு தங்கி இருந்த நிலையில் வீடு ஒதுக்கப்பட்டதும், ரோகிணி சிந்தூரி தனது குடும்பத்தினருடன் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அப்போது நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் இருந்த 'மைக்ரோ ஓவன், டெலிபோன் ஸ்டாண்ட், யோகா மேட்', மெத்தை, நாற்காலிகள் உள்பட 12 பொருட்களை அங்கிருந்து அவர் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

கலெக்டர் அலுவலகத்தில்...

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருந்தினர் மாளிகையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 12 பொருட்களின் தற்போதைய நிலை என்ன? என்றும், அந்த பொருட்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்தால் அதை திரும்ப தரும்படி கேட்டும், நிர்வாக பயிற்சி நிறுவன அதிகாரிகள் மைசூரு கலெக்டருக்கு கடிதம் எழுதினர்.

ஆனால் அந்த கடிதத்திற்கு தற்போது மைசூரு கலெக்டராக உள்ள கே.வி.ராஜேந்திரா பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரோகிணி சிந்தூரி நேற்று விளக்கம் அளிக்கையில், 'மைசூரு விருந்தினர் மாளிகையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 12 பொருட்களும், மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த பொருட்களை திருப்பி அனுப்புவது குறித்து மைசூரு மாவட்ட கலெக்டரிடம் பேசுகிறேன்' என்று கூறியுள்ளார். ஆனாலும் நிர்வாக பயிற்சி நிறுவனத்தில் இருந்த பொருட்களை எடுத்து செல்ல ரோகிணி சிந்தூரிக்கு யார் அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்