ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு நோட்டீசு
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கு கர்நாடக அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது.
பெங்களூரு:
மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் ரோகிணி சிந்தூரி. அங்கு அவருக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதற்கிடையே ரோகிணி சிந்தூரி மீது அதே மாவட்டத்தில் பணியாற்றிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷில்பா நாக் பரபரப்பு புகாரை கூறினார்.
இரு பெண் அதிகாரிகளின் மோதல் கர்நாடகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரோகிணி சிந்தூரி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் ரோகிணி சிந்தூரி விதிகளை மீறி செயல்பட்டதாக கர்நாடக அரசிடம் சா.ரா.மகேஷ் புகார் கூறினார். இந்த நிலையில் அந்த புகார் குறித்து ரோகிணி சிந்தூரிக்கு கர்நாடக அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது.
நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அரசு செயலாளர் ரவிசங்கர் உத்தரவிட்டுள்ளார். ரோகிணி சிந்தூரி தற்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.