போலீஸ் போல் நடித்து ரூ.80 லட்சம் கொள்ளை

பெங்களூருவில் போலீஸ் போல் நடித்து ரூ.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2022-12-30 21:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் போலீஸ் போல் நடித்து ரூ.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சேலத்திற்கு ரூ.80 லட்சத்துடன்...

துமகூருவில் ஒரு தொழில்அதிபர் வசித்து வருகிறார். அவரிடம் சந்தன் என்பவர் கார் டிரைவராகவும், குமாரசாமி ஊழியராகவும் வேலை பார்த்து வருகின்றனர். அந்த தொழில்அதிபர் ரூ.80 லட்சத்தை குமாரசாமி மற்றும் சந்தனிடம் கொடுத்து, அதனை சேலத்தில் வசிக்கும் வியாபாரிடம் கொடுக்கும்படி கூறி இருந்தார். இதையடுத்து, ரூ.80 லட்சத்தையும் 2 பைகளில் வைத்து கொண்டு துமகூருவில் இருந்து குமாரசாமி, சந்தன் ஆகியோர் தமிழ்நாடு சேலத்திற்கு புறப்பட்டார்கள்.

துமகூருவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 2 பேரும், வில்சன் கார்டன் அருகே ரிவோலி ஜங்ஷன் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த கடைக்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு சீருடை அணிந்து கொண்டு வந்த 3 பேர் காரை எடுக்கும்படி கூறினார்கள். அதாவது ஒருவர் இன்ஸ்பெக்டர் போன்றும், மற்ற 2 பேரும் போலீஸ்காரர்கள் போன்றும் இருந்தனர். அவர்கள் காரை எடுக்கும்படி 2 பேரிடமும் தெலுங்கு மொழியில் பேசி உள்ளனர்.

3 பேருக்கு வலைவீச்சு

இதனால் சந்தன், குமார சாமி ஆகியோர் அவர்களிடம் பேச முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தில் கண்மூடித்தனமாக 3 பேரும் திட்டியுள்ளனர். இந்த நிலையில், திடீரென்று காரின் கதவை திறந்த ஒருவர், 2 பணப்பையையும் எடுத்து கொண்டார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் பணப்பைகளுடன் தப்பி ஓடிவிட்டனர். அந்த 2 பைகளில் தான் ரூ.80 லட்சம் இருந்தது தெரியவந்துள்ளது.

போலீஸ் போல் நடித்து மர்மநபர்கள், இந்த கொள்ளையை அரங்கேற்றி இருந்தனர். துமகூருவில் இருந்து பணத்துடன் சேலத்திற்கு குமாரசாமி செல்வது பற்றி அறிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குமாரசாமி, சந்தனிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். இதுகுறித்து வில்சன் கார்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்