புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதித்திருப்பதுடன், வாகனங்கள் நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-29 22:30 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதித்திருப்பதுடன், வாகனங்கள் நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடை

பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச்தெரு, ரெசிடன்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) இரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் குவிவார்கள். இதையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கும், வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை எம்.ஜி.ரோட்டில் இருந்து அனில் கும்பிளே சர்க்கிளில் உள்ள மேயோ கால் வரையிலான ரெசிடென்சி ஜங்ஷனில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

அதுபோல், பிரிகேட் ரோட்டில் காவேரி எம்போரியம் ஜங்ஷனில் இருந்து அபேரா ஜங்ஷன் வரையும், சர்ச்தெருவில் பிரிகேட் ரோடு ஜங்ஷனில் இருந்து மியூசியம் ரோடு ஜங்ஷன் வரையும், மியூசியம் ரோட்டில், எம்.ஜி. ரோடு ஜங்ஷனில் இருந்து பழைய மெட்ராஸ் பாங்க் ரோடு வரையிலான சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரெசிடன்சி ஜங்ஷனில் இருந்து எம்.ஜி.ரோடு வரையிலான சாலைகளிலும் நாளை இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

வாகனங்கள் நிறுத்த தடை

மேற்கண்ட சாலைகளில் போலீசார் மற்றும் அவசர தேவைக்கான வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். இதுபோல், நாளை மாலை 4 மணியில் இருந்து நள்ளிரவு 3 மணிவரை எம்.ஜி.ரோடு, அனில் கும்பிளே சர்க்கிள், டிரினிட்டி சர்க்கிள், பிரிகேட் ரோடு, காவேரி ஜங்ஷன், சர்ச் தெரு, மியூசியம் ரோடு, ரெஸ்ட் கவுஸ் ரோடு, செயின்ட் மார்க்ஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட சாலைகளில் வாகன ஓட்டிகள் யாராவது தங்களது வாகனங்களை நிறுத்தி இருந்தால் நாளை மதியம் 2 மணிக்குள் எடுத்து செல்ல வேண்டும். 2 மணிக்கு மேல் அந்த சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மாற்று சாலைகளை பயன்படுத்தும்படி போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்