பீகாரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஆர்.ஜே.டி. தலைவர் மீது துப்பாக்கி சூடு
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநில பொதுச்செயலர் பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
பாட்னா,
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தின் சபியாபாத் பகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்.ஜே.டி) மாநில பொது செயலாளர் பங்கஜ் யாதவ் இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் பங்கஜை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். மார்பில் குண்டு காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது ஆபத்தான நிலையில் இல்லை நலமுடன் உள்ளார் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் மீதான முதற்கட்ட விசாரணையில், பங்கஜ் யாதவ் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் நவ்டோலியா பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினர் என்றும், அப்பகுதியில் விசாரணை நடப்பதாகவும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறினார்.
இதுதொடர்பாக, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளரான சீதாரஞ்சன் ககன் தனது எக்ஸ் பக்கத்தில், " நிதிஷ் அவர்களே, எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கிறது. கட்சியின் செயலாளர் மீது பகல் நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தால் ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மீது பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.