நகரமயமாக்கல், ரசாயன கழிவுகளால் மாசு அடைந்து வரும் ஜீவநதிகள்

நகரமயமாக்கல், ரசாயன கழிவுகளால் ஜீவநதிகள் மாசு அடைந்து வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-01-28 21:32 GMT

பெங்களூரு:

ஆற்றங்கரைகளில் தான் மனிதன் வாழ்ந்தான். விவசாயம் செய்யவும், அங்கிருந்து தான் நாகரிகம் பிறந்தது என்று வரலாற்று ஆவணங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால் இன்றோ நாகரிக வளர்ச்சியால் வற்றாத ஜீவநதிகளாக திகழும் ஆறுகள் மாசடைந்து வருவது அதிர்ச்சி தகவல் தான்.

இதற்கு பொத்தம் பொதுவாக அரசையும், தொழிற்சாலை நிர்வாகத்தினரையும் காரணமாக கூற முடியாது. மனிதனின் வாழ்வாதாரத்திற்கு மூல ஜீவனாக இருக்கும் ஆறுகளை காக்க தவறிய அனைவருமே இதற்கு பொறுப்பு தான். ஆறுகளின் நீர் மாசு அடைவதை தடுக்க அரசும், சில தனியார் தொண்டு நிறுவனத்தினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உயிர்நாடியாக விளங்கும் காவிரி நீர் மாசு அடைந்து வருவதாக தடுக்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஆற்றுநீர் மாசு அடைவது தொடர் கதையாக நீடித்து வருகிறது.

கர்நாடகத்தின் ஜீவநதிகள்

கர்நாடகத்தை பொறுத்தவரை காவிரி, கபிலா, கிருஷ்ணா, மல்லபிரபா, கட்டபிரபா, துங்கா, துங்கபத்ரா உள்பட 50-க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்ந்தோடி வருகிறது. இதனால் மாநிலத்தில் ஆற்றுப்பாசனம் மற்றும் அணை கால்வாய் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது.

நவீனத்துவம் வளர வளர சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடிநீர் மற்றும் காற்று மாசு அளவு நகர்மயமாக்கல், தொழிற்சாலைகள் பெருக்கம், வாகன பெருக்கத்தால் அதிகரித்து வருகிறது. அதிலும் ஆறுகளின் நீர் அதிகளவில் மாசு அடைந்து வருகிறது.

17 ஆறுகளின் நீர் மாசு

இந்த நிலையில் கர்நாடகத்தின் ஜீவநதிகளான காவிரி, கபிலா, மல்லபிரபா, கட்டபிரபா உள்ளிட்ட 17 ஆறுகளின் நீரை கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதித்தது.

இதில் அர்க்காவதி, லட்சுமண தீர்த்தா, மல்லபிரபா, துங்கபத்ரா, பத்ரா, காவிரி, கபிலா, காகினி, காளி, கிருஷ்ணா, அசங்கி கிருஷ்ணா, சிம்ஷா, பீமா, நேத்ராவதி, குமாரதாரா, துங்கா, எகச்சி ஆகிய 17 ஆறுகளின் நீரை நேரடியாக குடிக்க முடியாத அளவுக்கு மாசு அடைந்துள்ளது. எனவே அந்த 17 ஆறுகளின் நீரும் குடிக்க உகந்தது அல்ல. சுத்திகரித்தபிறகே அந்த ஆறுகளின் நீரை பயன்படுத்த முடியும் என்றும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரசாயன கழிவுகளே காரணம்

கர்நாடகத்தின் முக்கிய ஜீவநதிகளாக கருதப்படும் 17 ஆறுகளின் நீர் மாசு அடைந்து வருவதாக வெளியான தகவல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகரமயமாக்கல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் ஆறுகளின் நீர் மாசடைந்து வருகிறது. இதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் ஆறுகள் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆறு மாசடைவதை தடுக்க முடியாது

சிவமொக்காவை சேர்ந்த அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் என்.மஞ்சுநாத், "சிவமொக்கா துங்கா ஆற்றை ஒரு காலத்தில் 'கங்கா தீர்த்தம்; துங்கா பான' என்று கூறுவார்கள். அதாவது புனிதமான நதி கங்கை என்றும், பருக சிறந்த நீர் துங்கா ஆற்றின் தண்ணீர் என்றும் முன்னோர்கள் கூற கேட்டிருக்கிறேன். முன்பு உள்ள மக்கள் துங்கா ஆற்று தண்ணீரை தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது துங்கா ஆற்று தண்ணீரை குடிக்க முடியாத அளவுக்கு மாசு அடைந்து அசுத்தமாக வருகிறது. இதற்கு காரணம் துங்கா ஆறுகளில் செல்லும் வழியில் உள்ள காகித தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பது, சிவமொக்கா நகரில் 3 இடங்களில் ராஜகால்வாய் கழிவு நீர் ஆற்றில் கலப்பது தான் காரணம். பத்ராவதியில் ஓடும் பத்ரா ஆற்றின் நிலையும் இது தான்.

சிவமொக்கா மாநகராட்சி ராஜகால்வாய் கழிவுநீரை தடுத்து நிறுத்தி, அதனை சுத்திகரித்து ஆற்றில் விட வேண்டும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை சிவமொக்கா மாநகராட்சியால் தடுக்க முடியவில்லை. ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் குப்பை கழிவுகளையும், இறைச்சி கடைக்காரர்கள் இறைச்சி கழிவையும் ஆற்றில் கொட்டுகிறார்கள். இவ்வாறு இருக்கும்போது ஆற்றின் புனித தன்மையை எவ்வாறு காப்பாற்ற முடியும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வரை ஆறு மாசடைவதை தடுக்க முடியாது. ஆற்றில் கழிவுகளை கொட்டக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்தால் தான் துங்கா ஆற்றை காப்பாற்ற முடியும்."

புதிய, புதிய நோய்களால் பாதிப்பு

மங்களூரு முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார், "தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா மலைப்பகுதியில் நேத்ராவதி ஆறு உற்பத்தியாகி சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் இருந்து தான் மங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேத்ராவதி மற்றும் குமாரதாரா ஆறுகளின் தண்ணீர் குடிக்க தகுதியற்றவை என்று தெரிவித்துள்ளது. மாசடைந்த தண்ணீரை தான் நாம் குடித்து வருகிறோம். ஜீவநாடியாக விளங்கும் ஆறுகள் மாசடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். நேத்ராவதி, குமாரதாரா, பல்குனி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். மனிதன் உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஆறுகள் மாசடைந்தால் மக்கள் மட்டுமின்றி அதனை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் பாதிக்கப்படும். இதனால் அதிகாரிகள் ஆறுகள் மாசடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்."

மங்களூருவில் வசிக்கும் மலையாள சமாஜத்தின் தலைவர் எஸ்.கே.குட்டி, "அசுத்தமான ஆற்று தண்ணீரை குடிப்பதால் காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வரும். சிறு வயதிலேயே குழந்தைகள் நோயால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். ஆறுகளில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறது. இதனை ஏற்று கொள்ள முடியாது. ஆற்று தண்ணீரில் இதுபோன்ற கழிவுகளை கலப்பதால் அது குடிக்க பயன்படுத்த தகுதியற்றதாக மாறிவிடுகிறது. இதனை தெரியாமல் அந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தி, புதிய, புதிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆறுகளில் இருந்து மக்களுக்கு வினியோகம் செய்யும் தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். இதனை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், அரசு தீவிரமாக எடுத்து கொண்டு ஆறுகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும்."

ஆறுகளை காப்பாற்ற வேண்டும்

சிக்கமகளூரு இந்திராகாந்தி சாலையில் எலெக்ட்ரானிக் பொருட்கள் கடை வைத்திருக்கும் சமூக ஆர்வலர் சின்னப்பா, "மலைநாடு மாவட்டம் என்றழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தில் துங்கா, பத்ரா, ஹேமாவதி, வேதாவதி, எகச்சி ஆகிய 5 ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளின் தண்ணீர் தான் மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. இந்த ஆறுகளின் தண்ணீர் மாசடைந்து குடிக்க தகுதியற்றவை என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சிக்கமகளூருவில் பல இடங்களில் காபி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆறுகளில் கலக்கப்படுகிறது.

மேலும் கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், ஆறுகள் அதன் தன்மையை இழந்து வருகிறது. இந்த மாசடைந்த தண்ணீரை குடிப்பதால் வியாதிகள் வருவது உறுதி. விவசாயிகளும் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பல்வேறு கழிவுகளை கலப்பதால் அந்த ஆறுகளில் வாழும் நீர்வாழ் உயிரினங்களும் செத்து மடிகின்றன. ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து ஆறுகளை காப்பாற்ற வேண்டும்."

கும்பமேளா நடத்துவதை...

மைசூரு குவெம்புநகரை சேர்ந்த அரவிந்த் சர்மா, "ஆறுகள் மாசடைவது வேதனை அளிக்கிறது. முன்பு சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது மாசடைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் திருவிழா நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நதிகளில் நீராடுவது முக்கிய காரணம். ஆற்றங்கரையோரத்தில் ஆடு, கோழிகளை பலியிடுவது, இறைச்சி கழிவுகளை ஆற்றில் வீசுவது போன்றவற்றால் நதிகள் மாசடைகிறது. இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் தொழிற்சாலை கழிவுகளும் நதியில் தான் கலக்கப்படுகிறது. இதனால் புதிய, புதிய நோய்கள் மனிதர்களுக்கு வருகிறது. ஆறுகள் மாசடையாமல் தடுக்க நதிகளில் கும்பமேளா உள்ளிட்ட திருவிழா நடத்துவதை தடுக்க வேண்டும். அப்போது தான் ஜீவாதாரமாக விளங்கும் ஆறுகளை காப்பற்ற முடியும்."

பெங்களூரு சிவாஜிநகரை சேர்ந்த சரவணன், "கர்நாடகத்தில் காவிரி, ஹேமாவதி, கிருஷ்ணா, மல்லபிரபா உள்பட பல்வேறு ஆறுகள் ஓடுகிறது. இந்த ஆறுகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கிறது. இந்த கழிவுகளால் ஆற்று நீர் மாசடைகிறது. மேலும் அந்த நீர் கலக்கும் கழிவுகளில் உள்ள கிருமிகள் விவசாய நிலங்களுக்கு பாயும்போது, விளை பயிர்கள் நாசமாகிறது. பெங்களூரு மக்கள் அனைவரும் காவிரி நீரைத்தான் குடித்து வருகிறோம். தற்போது இந்த நீரை சுத்திகரிக்காமல் குடித்தால் தொற்று நோய் ஏற்படுகிறது. மேலும் இந்த நீரை குளிப்பதற்கு பயன்படுத்தும்போது, தோல் நோய்கள் வரும். பாரத பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்தி, ஒவ்வொரு ஆற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் பொதுமக்கள் அதை கண்டுகொள்வது இல்லை. ரசாயன கழிவுநீரால் வர்த்தூர் ஏரியில் நுரை பொங்குவதுபோன்றுதான் அனைத்து ஆறுகளில் நுரை பொங்கும். இதை மாற்ற வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். ஆறுகளை மேம்படுத்த தனி ஆணையம் அமைக்கவேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை அதிகாரியாக நேரிடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்".

இவ்வாறு அவர்கள் கூறினார்.

ஆறுகளை பராமரிக்க திட்டம் வேண்டும்

பெங்களூரு பசவேஸ்வராநகரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், 'லவ் இந்தியா' என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவருமான கே.சி.சிங் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காவிரி, அர்க்காவதி உள்பட 17 ஆறுகள் மாசு அடைந்துள்ளதாகவும், அதில் ஓடும் நீரை குடிநீர் நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும் ஒரு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நீர்ப்பாசனத்துறைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் கோடி நிதியை மாநில அரசு ஒதுக்குகிறது. அது மட்டுமின்றி கால்வாய்கள் மேம்பாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இவ்வளவு நிதி செலவு செய்தாலும். ஜீவ நாடிகளான ஆறுகளை நம்மால் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியவில்லை. மனித நாகரீகம் தோன்றியது ஆற்றங்கரைகளில் தான். ஆனால் அத்தகைய ஆறுகளின் நிலையை பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. ஊழல் புரையோடி போய் உள்ள காரணத்தால் தான் எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அதன் நோக்கத்தை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த நிலை தான் உள்ளது. நாம் கர்நாடகத்தில் உள்ளதால், அதுபற்றி நாம் பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாநில அரசு உரிய அக்கறையை செலுத்தவில்லை. மாநிலத்தின் பட்ஜெட்டில் ஒரு சதவீத மட்டுமே சுற்றுச்சூழல் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியையும் அதன் நோக்கத்தை நிறைவேற்ற முழுமையாக செலவு செய்வது இல்லை என்பது கவலைக்குரியது ஆகும். ஆறுகளை பாதுகாக்க தவறினால் வரும் காலத்தில் குடிநீருக்கே நாம் கஷ்டப்படும் நிலை உண்டாகும். இதை கர்நாடக அரசு மனதில் கொண்டு, ஆறுகளை தூய்மையாக பராமரிக்க தேவையான ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வருகிற மாநில பட்ஜெட்டில் இதற்கான திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும். நாங்கள் யாரிடமும் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆறுகளை தூய்மையாக வைத்துக்கொள்ள மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமக்கு குடிநீர் வழங்கும் ஆறுகளை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் கருத வேண்டும்.

இவ்வாறு கே.சி.சிங் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்