கலவரம் எதிரொலி; மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்குடன் அசாம் முதல்-மந்திரி சந்திப்பு

கலவரம் பாதித்த மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள முதல்-மந்திரி பைரன் சிங்கை அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா இன்று நேரில் சந்தித்து பேசினார்.

Update: 2023-06-10 05:29 GMT

இம்பால்,

மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. ஆனால், குகி என்ற பழங்குடி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், எஸ்.டி. பிரிவில் தங்களை சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் அவர்கள் கும்பலாக பேரணி நடத்தினர். இதன்படி, மே 3-ந்தேதி நடந்த இந்த பேரணிக்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.

இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. வன்முறை பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்கிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே விவரங்களை கேட்டார்.

இதன்பின்னர், மணிப்பூருக்கு நேரிலும் சென்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனான சந்திப்பையும் நடத்தி, அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிவதற்காக, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று நேரில் சென்றார். அவர் மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

இரு சமூக மக்களுக்கு இடையே நடந்த மோதல் எதிரொலியாக இணையதள வசதி தடை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த தடை நீடித்து வருகிறது.

இதுபற்றிய வழக்கை விசாரிக்கும்படி தாக்கலான மனுவை, அவசர வழக்காக விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு நேற்று மறுப்பு தெரிவித்தது.

மணிப்பூரில் சமூகத்தினர் இடையேயான வன்முறையால் உயிரிழப்பு, சொத்துகள் சேதம் உள்ளிட்டவற்றுக்காக கோர்ட்டு வருத்தம் தெரிவித்தது. இயல்பு நிலை திரும்ப போதிய நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்