மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்துக்கு மாறிய பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு உள்ளிட்டவை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை அப்போதைய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிலைப்பாட்டை தாக்கல் செய்ய விரும்புகிறேன் என்றார்.
அவரது வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மதம் மாறிய பட்டியல் இனத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.